
சண்டீகர் மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சேர்ந்த குற்றவாளியை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(49). இவரும், சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரும் என 6 பேரும் சேர்ந்து பெங்களூரில் கடந்த 2016ஆம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அப்போது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு பணம் இரட்டிப்புத் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை நம்பி நாடு முழுவதும் சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு உரிய வட்டி பணத்தையும், திருப்பி பணத்தை கேட்டவர்களுக்கு பணத்தையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதில் சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலீடு செய்த ஏமாற்றமடைந்த சண்டீகர் பகுதியினர் அங்குள்ள நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத்தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு கடந்த 2017-ல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்த நிலையில் தலைமறைவான குற்றவாளி சிவக்குமாரை மட்டும் சிபிஐ போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சிவக்குமார் கரூர் தாந்தோணிமலை கணபதி நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக புவனேஸ்வர் சிபிஐ போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
இதையடுத்து கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்த புவனேஸ்வர் சிபிஐ காவல் ஆய்வாளர் ஷனட்டன் தாஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அனுமதியுடன் கணபதிபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
தொடர்ந்து சிவக்குமாரை தாந்தோணிமலை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, சண்டீகர் மாநிலம் புவனேஸ்வருக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றனர்.