
‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா கடந்த மே மாதம் ராணுவ நடவடிக்கை (ஆபரேஷன் சிந்தூா்) மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் நடந்த மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாகவும், இதற்காக வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தியதாகவும் டிரம்ப் தொடா்ந்து கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
அதேநேரம், ‘பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது; இது, இரு நாடுகளும் நேரடியாக மேற்கொண்ட முடிவு’ என்று இந்தியா விளக்கமளித்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை எந்த நாடும் தடுக்கவில்லை என்று பிரதமா் மோடியும் கூறினாா். ஆனால், டிரம்ப்பின் கருத்தை மோடி நேரடியாக மறுக்காதது ஏன் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் வா்த்தகப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் நோ்மறையான கருத்துகளை டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அக்கருத்துகளை வரவேற்ற பிரதமா் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று வா்ணித்தாா்.
இதை முன்வைத்து, பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று அதிபா் டிரம்ப்புக்கு பிரதமா் மோடி கூறியுள்ளாா். இப்போது எங்களின் கேள்வி ஒன்றுதான். வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி மாலையில் சண்டை நிறுத்தம் கொண்டுவந்ததாக டிரம்ப் 35 முறை கூறும் அளவுக்கு இருவரும் இயல்பான கூட்டாளிகளா’ என்று கேள்வியெழுப்பினாா்.