
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்பு சரணடைந்தனர்.
மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீது நக்சல்கள் நடத்தப்படும் அட்டூழியங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பில் வளர்ந்துவரும் உள் வேறுபாடுகள் ஆகியவற்றில் ஏமாற்றமடைந்ததாக நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராபின்சன் குரியா கூறினார்.
16 நக்சல்களும் ஜனதன சர்க்கார், சேத்னா நாட்டிய மண்டலி மற்றும் மாவோயிஸ்ட்களின் பஞ்சாயத்துப் போராளிகள் உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கீழ்நிலையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் குழுக்களுக்கு ரேஷன் பொருள்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்களைக் கொண்டு செல்வதில் உதவுதல், ஐஇடிகளை வைத்தல், பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்தல் மற்றும் சோதனை நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் கூறினார். மார்ச் 2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.