
தமிழக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றம் செய்யப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், மதமாற்றத்திற்கு மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதம் மாற்றம் தொடர்பான விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோரே இதுகுறித்த புகார் கடிதத்தினைத் தமிழக முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு திட்டத்திற்கும் கவர்ச்சிகரமாகப் பெயர் சூட்டுவதில் அதீத அக்கறை காட்டும் திமுக அரசு, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது என்பதற்கான மற்றொரு சான்று இது.
முறையான அடிப்படை வசதிகள் மற்றும் தகுதியான ஊழியர்களை மேம்படுத்தாமல், வெறும் கட்டடங்களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்பதால் யாருக்கு என்ன பயன்? அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றனவே, இதுதான் திமுகவின் சமூகநீதியா?
அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? மற்ற மதங்களைப் பாதுகாத்து இந்து மதத்தைத் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக ஆட்சியில், இந்துக்களை மதமாற்றம் செய்தால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா? அல்லது திமுகவே இதுபோன்ற மதமாற்றவாதிகளுக்குப் படியளந்து இந்துமதத்தை அழிக்க முயற்சிக்கிறதா? அதிலும் மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது கோரத்தின் உச்சமல்லவா?
சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது. எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருமதி. லட்சுமி என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் பிற அரசு மாணவர் விடுதிகளையும் தனது நேரடிக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா?
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை… pic.twitter.com/xosjlLrVIv
— Nainar Nagenthran (@NainarBJP) September 22, 2025