
சமூக ஊடக ரீல்ஸ் மோகம் இளைஞர்களின் உயிருக்கு எமனாக மாறி வருவதை பிகாரில் இன்று(அக். 3) நடந்த கோர விபத்து நமக்கு உணர்த்துகிறது.
பிகாரில் பூர்ணியா அருகே 14 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறார்கள் ஐவர், துர்கா பூஜை விழாவுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை(அக். 3) அதிகாலை 5 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்படும் போது அவ்வழியாக மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜோக்பனி – தானாபூர் வந்தே பாரத் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகாரில் பூர்ணியா, அரரியா, மதேபுரா, சஹர்சா, ககரியா, பேகூசராய், சமஸ்திபுர், முஜஃப்ஃபர்புர், வைஷாலி, பாட்னா ஆகிய மாவட்ட ரயில் பயணிகளுக்கு நேரடி பலனளிக்கும் விதத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த மாதம் பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் சிறார்களின் உயிருக்கு எமனாக அமைந்துவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து வடக்கு ஃப்ராண்டியர் ரயில்வே (என்எஃப்ஆர்) நிர்வாகத்தின் தலைமை அதிகாரியொருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஜோக்பனி – தானாபூர்(26301) வந்தே பாரத் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. பூர்ணியா – கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு இடத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய மேர்கண்ட நபர்கள் சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நின்று விடியோ எடுத்துக் கொண்டிருந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. எனினும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.