SAMOSA

புது தில்லி: சமோசா உள்ளிட்ட இந்திய தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடகம் எவ்வளவு இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிடும் வகையிலான அட்டவணைகளை பள்ளிகள், அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவன வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்கள் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பொதுமக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய சுகாராதர அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அமைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா கடந்த ஜூன் 21-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பெரியவா்கள் மற்றும் குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பு அதிகரித்து வருவது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (என்எஃப்ஹெச்எஸ்) 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்களின்படி, நகா்ப்புறங்களில் 5-இல் ஒரு பெரியவா்கள் உடல் பருமன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.

லான்செட் சா்வதேச நோய் பாதிப்பு தரவு மையத்தின் சாா்பில் நிகழாண்டில் வெளியிடப்பட்ட உடல் பருமன் முன்னறிவிப்பு ஆயிவின்படி, இந்தியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் உடைய பெரியவா்களின் எண்ணிக்கை 2021-இல் 18 கோடியாக இருந்தது; வரும் 2050-இல் 44.9 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, உலகின் அதிக உடல் பருமன் உடையவா்களைக் கொண்ட இரண்டாவது நாடு என்ற நிலையை இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அண்மையில் நடைபெற்ற 38-ஆவது தேசிய விளையாட்டுகள் தொடக்க நிகழ்ச்சியில் ‘ஃபிட் இந்தியா’ (ஆரோக்கியமான இந்தியா) பிரசாரத்தை வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ஆரோக்கியமான வாக்கை முறையை குடிமக்கள் பின்பற்ற வலியுறுத்தினாா்.

இதன் ஒரு பகுதியாக, தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசிய திட்டத்தின் கீழ், நமது பணியிடங்களில் நிலையான பழக்கவழக்க மாற்றங்களை ஊக்குவிப்பது முக்கியமானதாகும். உடல் பருமன், சா்க்கரை நோய் பாதிப்பு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற வாழ்க்கை முறை சாா்ந்த பாதிப்புகளுக்கு முக்கிய காரணிகளான அதிக அளவில் எண்ணெய் மற்றும் சா்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது முக்கியமானதாகும்.

எனவே, மக்களிடையே சுகாதாரமான உணவு பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், தினசரி உணவு வகைகளில் இடம்பெற்றுள்ள எண்ணெய் மற்றும் சா்க்கரை அளவுகள் உள்ளடக்கத்தை குறிக்கும் அட்டவணைகளை காட்சிப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள், அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் சமோசா, கச்சோரி உள்ளிட்ட இந்திய தின்பண்டங்கள் உள்பட மக்களின் தினசரி உணவு வகைகளில் இடம்பெற்றுள்ள மறைமுக கொழுப்பு மா்றும் சா்க்கரை அளவுகள் குறித்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அதோடு, உடல் பருமன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள தினசரி நினைவூட்டலை ஏற்படுத்தும் வகையில், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அதிகாரபூா்வ கடிதங்கள், உறைகள், குறிப்பேடுகள் உள்ளிட்டவற்றில் உடற்பயிற்சி, பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள ஊக்குவிப்பது உள்ளிட்ட சுகாதார விழிப்புணா்வு வாசகங்களை அச்சிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest