
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
450 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை மட்டுமல்லாமல் சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் ‘திருப்திப்படுத்தும் அரசியலின்’ பங்கு ஆகியவற்றையும் விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா டுடே வலைத்தளம் கூருவதன்படி, அறிக்கையில் சம்பலில் இந்துக்களின் மக்கள் தொகை 15% சரிந்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியில், முற்காலத்தில் ஒரு கோயில் இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு உள்ளூர் நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உள்ளூர்வாசிகள் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு வழங்க வந்த காவலர்கள் மீது கற்கள் எறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. எழுந்த வன்முறையில் 20 காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர அரோரா தலைமையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.கே. ஜெயின் மற்றும் அமித் பிரசாத் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கமிட்டி மாநில அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.
சம்பல் கலவரத்தில், நயீம், பிலால், நவ்மன், மொஹம்மத் கைஃப், மற்றும் மொஹம்மத் ஆயன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பர்க் மற்றும் எம்எல்ஏவின் மகன் உட்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பெண்கள், மசூதி கமிட்டியின் தலைவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து, இணையதளத்தை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் காவல்துறை கலவரம் பரவாமல் கட்டுப்படுத்தியது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்கள் என்னென்ன?
சுதந்திரத்துக்குப் பிறகு 15 கலவரங்கள்
கமிட்டி வழங்கியுள்ள அறிக்கையின் படி 1947க்குப் பிறகு சம்பலில் 15 முறை கலவரங்கள் நடந்துள்ளன. 1948, 1953, 1958, 1962, 1976, 1978, 1980, 1990, 1992, 1995, 2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.
இந்து மக்கள் தொகை சரிவு, புனித கிணறுகள் மறைவு
இந்தியா டுடே கூறுவதன்படி, சம்பலில் மக்கள்தொகை வேறுபாட்டில் கவனம் செலுத்தியுள்ளது இந்த அறிக்கை. சுதந்திரத்தின் போது, நகராட்சிப் பகுதி மக்கள் தொகையில் இந்துக்கள் 45% ஆகவும், முஸ்லிம்கள் 55% ஆகவும் இருந்தனர் என்றும், இன்று, இந்துக்கள் 15-20% மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் 85%க்கு அருகில் உள்ளனர் என்றும் கூறுகிறது.
சம்பலில் ஒரு காலத்தில் 68 புனித யாத்திரைத் தலங்களும் 19 புனித கிணறுகளும் இருந்ததாகவும், அவற்றில் பல காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கவுள்ளார் என இந்தியா டுடே கூறுகிறது.
வன்முறைக்கு காரணம்
அறிக்கையில், எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பர்க்-ன் பேச்சு மதம்மாறிய இந்து பதான்கள் போராட்டத்தைத் தூண்டியது என்றும், அந்த போராட்டம் துர்க் முஸ்லீம்கள் மற்றும் பதான் முஸ்லீம்கள் இடையே வன்முறையாக வெடித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தளம், சட்டவிரோத வலைப்பின்னல்கள்
மேலும் இந்த அறிக்கை, அல்கொய்தா மற்றும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு சம்பலில் கடந்த காலங்களில் தளம் அமைத்துக்கொடுக்கப்பட்டது என்பதையும், அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மதகுரு மௌலானா ஆசிம் என்ற சனா-உல்-ஹக் பற்றியும் குறிப்பிடுகிறது என இந்தியா டுடே கூறியுள்ளது.
மேலும் சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வலைப்பின்னல் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையால் எழுந்த சர்ச்சை
இந்துத்துவ அமைப்பு ஆர்ப்பாட்டம்
இந்த அறிக்கை உ.பி அரசியலில் புதிய அலையை எழுப்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, சம்பல் எம்.பி ஜியா-உர்-ரஹ்மான் பர்க் கலவரங்களை கட்டமைப்பதாகக் குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது.
“திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம்” – பாஜக
பாஜகவினர் முந்தைய சமாஜ்வாடி ஆட்சியின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் கலவரங்களுக்குக் காரணம் என விமர்சித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர், “சம்பல் பல இனவாத கலவரங்கள் நடந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்துக்கள் அங்கு பாதுகாப்பாக உணராததால் வெளியேற வேண்டியிருந்தது… முந்தைய அரசாங்கங்கள் அதற்கு எந்தவித பாதுகாப்பும் தர முன்வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
மக்களை திசைத்திருப்ப எழுப்பப்பட்ட விவகாரம்
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது சமாஜ்வாடி கட்சி, பாஜக உண்மையான பிரச்னைகளிலிருந்தும் தங்கள் தோல்விகளிலிருந்தும் மக்களை திசைத் திருப்ப இதுபோன்ற விஷயங்களை எழுப்புவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “இது (முதல்வரிடம் சமர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை) ஒரு ரகசிய ஆவணம். ஆனாலும் விவாதத்தை எழுப்புவதற்காக சில புள்ளிகள் மட்டும் வெளியில் கசியவிடப்பட்டுள்ளன. இது பிரச்னைகளிலிருந்து மக்களை திசைத்திருப்புவதற்கான யுத்தி” எனக் கூறியுள்ளார்.
இந்துக்கள் வெளியேறியது ஏன்?
பரேலியைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரிஸ்வி இந்த அறிக்கையை நிராகரித்தார். “தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவும், வேலை தேடவும் இந்துக்கள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம்.” என்றார்.
மறுபக்கம் பாஜக, சம்பலில் இருந்து இந்துக்களை வெளியேற்றியது ‘இந்துக்களுக்கு எதிரான சதி’ என்று கூறுவதுடன், இந்துக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான கொள்கைகளை வகுக்கவும் உள்ளதாக கூறிவருகிறது.