
நடிகை சரோஜா தேவி காதல் மற்றும் திருமணம் குறித்து பேசியவை…
நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று பெங்களூருவில் காலமாகிவிட்டார். நடித்துவந்த காலத்தில் எத்தனை லட்சம் கண்களைத் தன் கண்களால் ஈர்த்திருப்பார்? கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என 50 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இடப்பட்ட பெயர்களெல்லாம் இன்றும் பசுமையாக ரசிகர்களின் மனதில் நிறைந்திருந்திருக்கிறது.
1960 – 1970 காலகட்டங்களில் சரோஜா தேவியுடன் நடிக்காத இந்திய திரைப்பிரலங்களே இல்லை எனலாம். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, சந்திரபாபு, ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டிஆர், நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ் குமார், ஹிந்தியில் திலீப் குமார் என இந்தப் பேரழகியுடன் இணையாத இந்தியப் பிரபலங்கள் குறைவுதான்.
நடிகர் எம்ஜிஆரே படப்பிடிப்பில் காத்திருக்கும் அளவிற்கு மிக பிசியான நடிகையான சரோஜா தேவி, ஆச்சரியமாக, பல நாள்கள் 20 மணி நேரம் வரைகூட படப்பிடிப்புகளிலேயே இருந்திருந்திருக்கிறார்.
பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் இருவர் உள்ளம், பார்த்தால் பசிதீரும், அன்பே வா, படகோட்டி உள்ளிட்ட சில படங்களே சரோஜா தேவிக்கு மிக நெருக்கமான படமாக இருந்திருக்கிறது.
எவ்வளவோ உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என குறுகிய காலங்களிலேயே திரைத்துறையின் பெரும் பிரபலங்களைச் சரோஜா தேவி சந்தித்தாலும் அவர் திரைத்துறையைச் சேர்ந்த யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சொல்லப்போனால், பல நடிகர்கள் சரோஜா தேவியிடம் காதலைச் சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தும், யாருடைய காதலையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, 1967 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ ஹர்ஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
ஆனால், ஏன் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை? தன்னிடம் காதலைச் சொன்னவர்களைத் திருமணம் செய்யவில்லை? என்கிற கேள்விகளுக்கு சரோஜா தேவி பழைய நேர்காணல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார்.
அதில், “நான் என் அம்மா பேச்சை கேட்டு அதன்படியே நடந்துகொண்டிருந்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன் அம்மா என்னிடம், ‘திரைத்துறையிலிருப்பவர்களை நீ திருமணம் செய்யக்கூடாது. காதல் பேச்சுகள் வரக்கூடாது. ஏனென்றால், உனக்குப் பின்பும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இதனால் பாதிக்கக்கூடாது’ என்றார். அம்மா அப்படிசொன்னதால், எப்படியும் திருமணம் வரை அந்த உறவு செல்லாது என்பதால் எனக்கு காதல் எண்ணம் வரவில்லை.” என்றார்.
இதையும் படிக்க: கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் சரோஜா தேவி!