
ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வரும் கபில் சர்மா, கனடாவில் சுர்ரே பகுதியில் கப்ஸ் கஃபே என்ற உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சியில் சீக்கியர்கள் குறித்து அவமதித்ததாகக் கூறி, அவரது உணவகம் மீது ஜூலை 10 ஆம் தேதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காலிஸ்தான் பயங்கரவாதிஹர்ஜித் சிங் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்னர் மீண்டும் அவரின் உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில், 25 (குண்டுகள்) முறை சுடும் சத்தம் கேட்டதாகக் கூறுகின்றனர். இருப்பினும், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பும் இல்லை.
ஆனால், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிஷ்னோய் ரௌடி கும்பல் பொறுப்பேற்றுள்ளது. கபில் சர்மாவின் உணவகத் திறப்பு விழாவுக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாலும், இணையத்தில் திரையிடப்பட்ட `தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் சல்மான் கான் தோன்றியதாலும்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிஷ்னோய் கும்பல் கூறியது.
1998 ஆம் ஆண்டில் பிளாக்பக் மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிஷ்னோய் இனத்தவர் வலியுறுத்தி வந்தநிலையில், தொடர்ந்து கொலை மிரட்டல்களும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.