satankulam-case-ed

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடந்த உண்மைகளைக் கூறுவதாக கைதான காவல் துறை அதிகாரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுவை தாக்கல் செய்து, தந்தை – மகன் கொலை வழக்கில் உண்மையைச் சொல்கிறேன் என அப்ரூவராக மாறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கரோனா ஊரடங்கின்போது கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அவர்கள் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், உண்மை தன்மையைக் கண்டறிய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 2 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறுவதாகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை – மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பதால், காவலர்கள் செய்த குற்றங்களைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீண்டுகொண்டே வந்த இந்த வழக்கில், இது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest