
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், இரவு 10 மணி வரை பத்திரபதிவு நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு புகார் தொடர்ந்து வந்தது.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில் இன்று இரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினிகள், பத்திர பதிவுக்கு வந்த ஆவணங்கள் மற்றும் அனைத்து அறைகள், வாகனங்களில் சோதனை நடத்தியதோடு, துணை சார் பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் யாரையும் கைது செய்யாமல் தொடர் விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: தேஜஸ் நெட்வொர்க்ஸ் முதல் காலாண்டு இழப்பு ரூ.194 கோடி!