
கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகார் எழுந்தது.

எனவே அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இணைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து சுரேஷ்குமார் கேட்டதற்கு,

“உங்கள் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்க ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்.” என்று உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மறுக்கவே, “ரூ.1.5 லட்சம் பணமாவது லஞ்சமாக கொடுக்க வேண்டும்.” என்று இந்திரா கறாராக தெரிவித்துவிட்டார்.
இதுதொடர்பாக சுரேஷ் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி, சுரேஷ் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்திரா லஞ்சம் வாங்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.