
நொய்டாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் மனோஜ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. ஜிம்மில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை மனோஜ் குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து வீடு திரும்பிய பிறகு, அந்தச் சிறுமி தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தாா். பின்னா் அவா்கள் காவல் துறையை அணுகினா்.
அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மனோஜ் குமாா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.