
நமது நிருபர்
சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பெக்கர் தசைநார் சிதைவு (பிஎம்டி) நோயால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் எல். முருகானந்தம் என்பவருக்கு ஒரு விவகாரத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 29.11.2022-இல் உத்தரவிட்டிருந்தது.
தனது குடும்பத்துடன் நிலத் தகராறு கொண்டிருந்த உறவினர் ஒருவரின் குற்றவியல் புகாரில் முருகானந்தம் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கையின்போதும், சிறையில் இருந்தபோதும் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறி, ரிட் மனுவை அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
கைது செய்யப்பட்ட நிலையிலிருந்து விசாரணை மற்றும் சிறைவாசம் வரை, காவல் துறை மற்றும் சிறை ஊழியர்களிடையே பயிற்சி மற்றும் உணர்திறன் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பாதகத்தை எதிர்கொள்கின்றனர். சிறை வாழ்க்கை பற்றிய அனைத்து விதிகள், விதிமுறைகள் மற்றும் அத்தியாவசிய தகவல்கள் அத்தகைய கைதிகளுக்கு பிரெய்லி, பெரிய அச்சு எழுத்து, சைகை மொழி அல்லது எளிமையான மொழி போன்ற அணுகக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களில் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து சிறை வளாகங்களிலும் சக்கர நாற்காலிக்கு ஏற்ற இடங்கள், அணுகக்கூடிய கழிப்பறைகள், சாய்வுதளங்கள் மற்றும் உணர்வு பாதுகாப்பான சூழல்கள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சிறைகளும் பிசியோதெரபி, சைகோதெரபி மற்றும் பிற தேவையான சிகிச்சை சேவைகளுக்கான பிரத்யேக இடங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் மாநில அளவிலான அணுகல் தணிக்கையை சமூக நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட அணுகல் தணிக்கையாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு சமூகத்தில் கிடைப்பதற்கு சமமான சுகாதாரப் பராமரிப்பை சிறையில் அரசு வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பாகுபாடு அல்லது பாரபட்சமின்றி நிவர்த்தி செய்ய அனைத்து சிறை மருத்துவ அதிகாரிகளுக்கும் போதுமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி கைதி ஒவ்வொருவருக்கும் அவர்களின் குறிப்பிட்ட உடல்நலம் மற்றும் உணவுத் தேவைகளுக்கு ஏற்ப சத்தான மற்றும் மருத்துவ ரீதியாக பொருத்தமான உணவு வழங்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவுகளை மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் விரிவான அறிக்கையை இத்தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சிறைகளின் தலைமை இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.