supreme_court

நமது நிருபர்

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையும் நீதிமன்றம் இணைத்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் மனுதாரர் யானை ராஜேந்திரன் முன்வைத்த வாதம்: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது சாதாரண விஷயம் அல்ல. 38 காவல் நிலையங்களில் இருந்த 41 ஆவணங்கள் திருட்டுப் போய் உள்ளன. காவல் துறையின் பாதுகாப்பிலிருந்து ஆவணங்கள் மாயமானதை எவ்வாறு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்?.

இந்த 41 ஆவணங்களும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன அல்லது காணாமல் போய் உள்ளன. ஒருவேளை காணாமல் போயிருந்தால்கூட அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஒரு முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்தன. தற்போது எந்த ஆவணமும் இல்லை. சிலை கடத்தல் வழக்குகளை அதிகாரிகள் கையாண்ட விதத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.

அரசு சொல்வதுபோல கோப்புகள் காணாமல் போகவில்லை; அவை திருடப்பட்டிருக்கின்றன. மேலும், திருடப்பட்ட பல சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாலேயே வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என யானை ராஜேந்திரன் வாதாடினார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கோப்புகள் காணாமல் போனதாக மனுதாரர் கூறுகிறார். தமிழக அரசு இதில் என்ன நடவடிக்கை எடுத்தது?. எஃப்ஐஆர் கணினிமயமாக்கப்பட்டுவிட்டதா?. கணினிமயமாக்கப்பட்டால் அது திருடப்பட முடியாது என்று தெரிவித்தனர்.

அதற்கு தமிழக அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஹெக்டே, “இந்த விவகாரம் 1985-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்து தொடங்குகிறது. சில வழக்குகளில் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அவை முடித்து வைக்கப்பட்டன’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆரம்பத்திலிருந்தே 375 சிலைகள் காணாமல்போனதாகத் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் 41 கோப்புகள் தொலைந்து போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொலைந்த அல்லது திருடப்பட்ட கோப்புகள் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதா?. இதற்கு உரிய பதில் இல்லை என்றால் தலைமைச் செயலருக்கு அழைப்பாணை அனுப்ப நேரிடும்.

தொலைந்த கோப்புகள் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தொலைந்த சிலைகள் குறித்து ஏன் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை? சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? 11 சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மத்திய அரசும் வழக்கில் இணைப்பு: வெளிநாடுகளில் இருந்தும் சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. எனவே, நாங்கள் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கலாசார அமைச்சகத்தையும் வழக்கில் சேர்க்கிறோம்.

இந்த வழக்கில் மத்திய அரசு, வெளியுறவுத் துறை அமைச்சக செயலர், கலாசார அமைச்சக செயலர் ஆகியோரை இணைத்து நோட்டீஸ் அனுப்புகிறோம். வழக்கில் அவர்களும் ஆஜராகட்டும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிபதிகள், “சில கோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை எதனால் அழிக்கப்பட்டன?, அதில் முடிவுகள் வந்துவிட்டனவா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு வழக்குரைஞர் சபரீஷ் சுப்ரமணியன், விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் மேற்கொண்டு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவ. 11-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest