IMG_20250708_172722

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில், சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சிவகங்கை எஸ்.பி சந்தீஷ் ஆகியோருடன் பிற மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோயில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி நாடுகள் எனும் பகுதிகளுக்கு கீழ் உள்ள கிராம மக்களுக்கான தலைமை கோயில் ஆகும். குங்குமகாளியம்மன் திருக்கோயில் உற்சவத்தினை தொடர்ந்து, இத்திருக்கோயில் உற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பத்து நாள்கள் நடைபெறும்.

இத்திருக்கோயில் திருத்தேரோட்டம் 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் காரணமாக நடைபெறவில்லை. 2002, 2004, 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. 2003-ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே சுமூக உறவு ஏற்படாததால் தேரோட்டம் நடைபெறவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திருப்பணி மேற்கொள்ளப்பட்டதால் தேரோட்டம் நடைபெறவில்லை. 05.02.2012 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. 22.04.2015 அன்று பழைய தேர், பிரிக்கப்பட்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, 2018-ஆம் ஆண்டு முடிவுற்றது

தேரோட்டத்தில் பெரியகருப்பன்

2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. 17.06.2022 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சுமூக உறவு எட்டப்படாததால் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை.

அதன்பின்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, அனைத்து தரப்பினர்களைக் கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு 11.02.2024 அன்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலின்படி கடந்த வருடம் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில், இந்த ஆண்டின் ஆனித்திருவிழாவும் கடந்த 30.06.2025 அன்று துவங்கி 09.07.2025 அன்று நிறைவு பெறும் வகையில் நடைபெறவுள்ளது. அதில், முக்கிய நிகழ்வான தேரோட்டமும் இன்றைய தினம் இனிதே நிறைவு பெற்றுள்ளது. அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேரோட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இவ்வாண்டும் நான்கு நாட்டார்களில் உஞ்சனை மற்றும் செம்பொன்மாரி நாட்டார்கள் தரப்பில் அவர்களுக்கான மரியாதையினை பெற்றுக்கொண்டனர், தென்னிலை மற்றும் இறகுசேரி நாட்டார்கள் சார்பில் சிவகங்கை தேவஸ்தானம் மரியாதையினை பெற்றுக்கொண்டனர்.

கலைஞர் திருவாரூர் தேர் திருவிழா நடைபெறுவதற்கு வழிவகுத்தார். அவர் வழியில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த ஆண்டை போலவே, இவ்வாண்டும் கண்டதேவி கிராமத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்ட திருவிழா மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேவஸ்தானம், பொதுமக்கள் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest