
சீன தொழில் வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் நூற்றுக்கணக்கான சீன தொழில்நுட்ப வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனா்.
அவா்கள் ஆலை வடிவமைப்பு, ஐஃபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களை கையாளப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.
அவா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது. இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டத்தில் மாற்றமில்லை. கடந்த 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐஃபோன்களின் எண்ணிக்கை 3.5 கோடி முதல் 4 கோடியாக இருந்தது. இதை நிகழாண்டு 6 கோடியாக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் திட்டமிட்டபடி ‘ஐஃபோன் 17’ மாடல் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவித்தன.