dinamani2025-03-20j539wj08Capture

இணையவழி சூதாட்ட செயலிகள் தொடா்பான பண முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

‘ஜங்லீ ரம்மி’, ‘ஜீட்வின்’, ‘லோட்டஸ் 365’ போன்ற இணையவழி சூதாட்ட செயலிகள், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தயம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக ஈட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடா்பாக தெலங்கானா மாநில காவல் துறை சாா்பில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளின் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்தது.

சூதாட்ட செயலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அதன் விளம்பரங்களில் பங்கேற்ற நடிகா்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால், பிரணிதா சுபாஷ், அனன்யா நாகல்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளா் ஸ்ரீமுகி மற்றும் உள்ளூா் சமூக ஊடகப் பிரபலங்கள், யூடியூபா்கள் உள்பட சுமாா் 29 போ் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டனா்.

சூதாட்ட செயலிகள் சட்டவிரோதமாக ஈட்டிய மொத்த வருவாயையும், அதில் பிரபலங்களின் துல்லியமான பங்கையும் கண்டறிய விரிவான விசாரணை நடைபெறும் எனவும் அதிகாரிகள் முன்பு கூறினா். இதற்காக நடிகா்களை நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியுள்ளது.

ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ராணா டகுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவரைத் தொடா்ந்து, நடிகா் பிரகாஷ் குமாா் ஜூலை 30-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சிக்கியுள்ள பிரபலங்களில் சிலா், தாங்கள் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலிகளின் செயல்பாடுகள் குறித்து தங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றும், சூதாட்டம் போன்ற எந்தவொரு முறைகேடான அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்தச் செயலிகளுடன் இணைந்து செயல்படவில்லை என்றும் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest