
சூர்யாவின் ‘அகரம் பவுண்டேஷன்’ 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா எடுக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த சூர்யா, ”இப்ப ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, கடந்த 2006 வருஷத்துல பத்துக்கு பத்து அளவில் சிறிய அறையில் ஆரம்பித்தது அகரம் பயணம். திரும்பிப் பார்த்தால் 20 வருஷம் ஆகிடுச்சு. 2010-ல் விதைத் திட்டம் ஆரம்பித்தோம். இந்த திட்டத்தில் 6 ஆயிரம் குழந்தைகள் கல்லூரி கல்விக்கு உறுதுணையா இருக்க முடிந்திருக்கிறது. அவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண் குழந்தைகள். இத்தனை குடும்பங்களில், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.
இத்தனை வருஷ பயணத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு அனுபவம். இந்த குழந்தைகளுக்காக, அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்கனுங்கறது என்னோட கனவும், ஆசையும் கூட!.” என்று நெகிழ்ந்து பேசியிருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தின் வெற்றியில் கிடைத்த லாபத்தில் இருந்து 10 கோடி ரூபாய் அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கியிருந்தார். அப்போது அவர் தெரிவித்தது இது. ”நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது.

அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக…
அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டும் கொண்டாடுவதையொட்டி சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றை எடுக்கின்றனர். அதில் அகரத்தில் படித்து இன்று பல்வேறு உயர் பதவிக்களில் வகித்து வரும் மாணவர்களில் இருந்து இப்போது பயன்பெற்று வரும் பல்வேறு மாணவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் அந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
இதற்கான விழா வருகிற 3ம் தேதி ஞாயிற்று கிழமை ( ஆகஸ்ட் 3) சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சூர்யாவுடன், சிறப்பு விருந்தினர்களாக கமல், சிரஞ்சீவி ஆகியோரும் பங்கேற்று பேசுகின்றனர். விழாவிற்காக ஏற்பாடுகளை சூர்யா கவனித்து வருகிறார் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…