
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

“நான் டெல்லி சென்று வந்த பிறகு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.
அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை.
உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீப் வைத்து துடைத்தேன்.
இதனை அரசியல் செய்கிறார்கள். வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் கோடு போட்டால் செந்தில் பாலாஜி ரோடே போட்டு விடுவார்” என்று கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
அதே செந்தில் பாலாஜி எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அவரை எப்படி பேசினார் என்பதை இந்த ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டுக் காண்பித்தார்.
அந்த வீடியோவில் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கும் ஸ்டாலின், “செந்தில் பாலாஜியை பற்றி சொல்லவே தேவையில்லை. 15 முறை அமைச்சரவையை மாற்றியபோது இவரை மட்டும் மாற்றவே இல்லை.
சீனியர் அமைச்சர்களை எல்லாம் மாற்றினார்கள். ஆனால் இவரை மாற்றவில்லை.
ஏனென்றால் சசிகலாவிற்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருந்தவர் செந்தில்பாலாஜி.
இடையில் ஜெயலலிதா அம்மா சிறைக்குச் செல்லும்போது யாரை முதல்வர் ஆக்குவது என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.
கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்வது, ஆட்கடத்தல் என்று பாலாஜியும் அவரது தம்பியும் கரூரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்” என்று விமர்சித்திருக்கிறார். வீடியோவைக் காண்பித்த பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “இவையெல்லாம் அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் சொன்ன கருத்து.”

ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.