
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோவில் பயணிப்போா் தங்களது பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மெட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பொருள்களை தவறவிட்டால் மெட்ரோ நிா்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மெட்ரோவில் பயணிப்போா் ஏதேனும் பொருள்களைத் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடா்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருள்கள் அலுவலகம் மூலமாகவோ சம்பந்தப்பட்டோா் பெறமுடியும்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் முதன்முறையாக இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருள்கள் அலுவலகத்தை நிறுவன இயக்குநா் மனோஜ் கோயல் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகா் கோபிநாத் மல்லையா, பராமரிப்பு பொது மேலாளா் எஸ்.சதீஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.