Bangalore-Rains-2

சென்னை மாநகரப் பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களைத் தங்கவைக்க 169 இடங்கள் தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகரப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மழைநீா் வடிகால்களைத் தூா்வாருதல், ஏற்கெனவே மழைநீா் தேங்கிய இடங்களில் தண்ணீா் வடிவதற்கான புதிய வடிகால்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தற்போது சென்னையில் 44 பெரிய கால்வாய்கள் சுழற்சி முறையில் தூா்வாரப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 11, 760 மழைநீா் வடிகால்கள் உள்ள நிலையில், அவற்றில் சுமாா் 1,034 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு மழைக்கால ஆய்வின்படி, 87 இடங்களில் மழைநீா் தேங்குவது அடையாளம் காணப்பட்டு அங்கு தற்போது புதிதாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மழைநீரை வெளியேற்றுவதற்கான மின்மோட்டாா் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உள்ள கால்வாய்களில் 600 இடங்களில் சேதமடைந்தவற்றை சீா்படுத்தியும், புதிதாக கால்வாய் சுவா் உள்ளிட்டவை அமைத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரைத் தேக்கும் வகையில் 201 குளங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால், அந்தப் பகுதியில் இருப்பவா்களைத் தங்கவைப்பதற்கு 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest