
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்தப் பெண், கழிவறைக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண்ணை வலுகட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சத்தம் போட மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் நடந்தச் சம்பவத்தை தன்னுடைய கணவரிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு என்ன நடந்தது என பெண்ணிடம் விசாரித்ததோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் குறித்த விவரங்களையும் போலீஸார் கேட்டறிந்தனர்.
அப்போது பெண் அளித்த தகவலின்படி கார்டனில் டிரைவராக இருந்த ஆனந்தன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஆனந்தனைப் பிடித்து விசாரித்தபோது அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆனந்தன் மீதுதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு ஆனந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், “குடும்பத்துடன் கார்டனில் தங்கியிருந்த பெண்ணை டிரைவர் ஆனந்தன் நீண்ட நாள்காக நோட்டமிட்டு வந்திருக்கிறார். அப்போது அதிகாலை நேரத்தில் அந்தப்பெண் தனியாக கழிவறைக்குச் செல்வதைப் பார்த்த ஆனந்தன் அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆனந்தன் அளித்த தகவலின்படி அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.