sunitha-

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 11.06.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரகாஷ், அவரின் கணவர் பிரகாஷ் ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். இவர்களைப் போல அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோரும் என்னுடன் நட்பாக பழகி வந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 06.12.2024ம் தேதி வரை பிசினஸ் என்ற பெயரில் 5.13 கோடி ரூபாய் மதிப்புள்ள 9.5 கிலோ தங்க நகைகளையும், 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளையும் என்னிடம் பெற்றனர். அப்போது என்னிடம் வாங்கி நகைகள், பணத்துக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறினர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பிரகாஷ்

அந்த வகையில் என்னிடமிருந்து 10.89 கோடி ரூபாயை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்ட போது திருவான்மியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவர் என்னை மிரட்டினார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் EDF-2 உதவி கமிஷனர் பெனாசிர் பாத்திமா தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஸ்ரீதேவியிடம் இந்தக் கும்பல் ஆசைவார்த்தைகளைக் கூறி பணம், நகைகளை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுனிதா பிரகாஷ் (43) அவரின் கணவர் பிரகாஷ் (43) திருவான்மியூரைச் வழக்கறிஞர் சிவகுருநாதன்(47) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest