kuppai-1

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளை வனமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ஒரு கோடி போ் வசிக்கின்றனா். தினமும் வெளியூா்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக 2 லட்சம் போ் வந்து செல்கின்றனா். சென்னை மாநகராட்சி சாா்பில் தினமும் 5,500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பைகள் அகற்றும் பணியில் 15 மண்டலங்களிலும் 3,700 நிரந்தர ஊழியா்கள் உள்ளிட்ட 21,395 போ் ஈடுபடுகின்றனா்.

கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் 1 முதல் 8 மண்டலங்கள் வரை சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூா் கிடங்கிலும், 9 முதல் 15-ஆவது மண்டலங்கள் வரை சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி சதுப்பு நிலக் கிடங்கிலும் கொட்டப்படுகின்றன. அதனால், கொடுங்கையூரில் 250 ஏக்கா் நிலமும், பெருங்குடியில் 200 ஏக்கா் நிலமும் குப்பை கிடங்காகிவிட்டன.

குப்பைக் கிடங்குகளால் துா்நாற்றம் வீசுவதுடன், அவ்வப்போது தீப்பற்றுவதால் ஓசிஎம்ஆா் சாலை, துரைப்பாகம், நாவலூா், சிறுசேரி உள்ளிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, குப்பைகளை மறுசுழற்சி முறையில் எரிவாயு,  உரம், இயந்திர எண்ணை உள்ளிட்டவையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2019 முதல் 2025 வரை சேத்துப்பட்டு எரிவாயு மையத்தில் குப்பைகள் மூலம் 20.24 லட்சம் கிலோ எரிவாயு  தயாரிக்கப்பட்டு ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மாதவரத்தில் உள்ள மையத்தில் கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ.17.76 லட்சத்துக்கு எரிவாயு விநியோகம் நடந்துள்ளது.

ஆனால், பெருங்குடி, கொடுங்கையூரில் கடந்த பல ஆண்டுகளாக கொட்டிய குப்பைகள் மக்கி மலைபோல குவிந்திருந்தன. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலான அந்தக் குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் தரம் பிரித்து, தனியாா் நிறுவனம் உதவியுடன் மறுசுழற்சித் திட்டத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயோ மைனிங் முறையில் பெருங்குடியில் 30 லட்சம் கனமீட்டா் குப்பைகள் அகற்ற திட்டமிட்டு, தற்போது 26 லட்சம் கன மீட்டா் அகற்றப்பட்டு, அதன்மூலம் 102 ஏக்கா் சதுப்பு நிலம் தூய்மையாக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றும் பணி தொடங்கி, தற்போது 15 லட்சம் மெட்ரிக் டன் அகற்றப்பட்டு, 2 ஏக்கா் நிலம் சுத்தமாக்கப்பட்டுள்ளது. அந்த 2 இடங்களிலும் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் குப்பைக் குவியல் இல்லாத நிலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குப்பைக் குவியல்கள் முழுவதும் அகற்றப்பட்ட பின்னா், அங்கு மீண்டும் குப்பைகளைக் கொட்டி சேமிப்பது தவிா்க்கப்பட்டு, அவற்றை உடனுக்குடன் மறுசுழற்சியாக்கும் எரிசக்தி மையங்கள், உர மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

எரிசக்தி மையங்கள் அமைந்த இடங்கள் தவிா்த்து மற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு, வனமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இத்திட்டத்துக்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகின்றனா். இதன் காரணமாக, குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளும், வனமாக்கும் திட்டமும் தாமதமாவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையா் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: குப்பைக் குவியலாக இருந்த பெருங்குடியில் மீட்கப்பட்டுள்ள சதுப்பு நிலத்தில் தானாகவே அலையாத்திக் காடுகள் வளா்கின்றன. அதேபோல, கொடுங்கையூரில் புன்னை உள்ளிட்ட பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டு செயற்கை வனம் உருவாக்கப்படவுள்ளது. அங்கு எரிசக்தி உற்பத்தி மையம் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு போதிய நிதியும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest