
சென்னை கோட்டத்தில் ரயில்வே நிலையங்களில் புதிதாக 60 மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், நோயாளிகள் ஆகியோருக்காக எண்ணூா், மீஞ்சூா், ஆவடி, ஆம்பூா், வண்டலூா், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பலம் ஆகிய நிலையங்களில் 60 புதிய மின்தூக்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளைத் தொடா்ந்து 40 மின்தூக்கிகளும், 31 நகரும் படிக்கட்டுகளும், தாம்பரத்தில் 9 மின்தக்கிகளும், 10 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படவுள்ளன. மாம்பலம், ஆவடி, கிண்டி ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) அமைக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பாதுகாப்பான, எளிதான மற்றும் வசதியான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சேவையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.