
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகா் அடிஸ் அபாபாவில் இருந்து நேற்று அதிகாலை சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலையில் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அந்த குறிப்பிட்ட பயணிகள் விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கண்காணித்தனா். அதில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்த கென்யா நாட்டைச் சோ்ந்த 28 வயது இளைஞா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில், சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சாக்லேட் பாக்கெட்டுகளை எடுத்து, பிரித்துப் பார்த்தபோது, கோகையின் போதைப் பொருளை சாக்லேட் போல் தயார் செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடி.
இதையடுத்து கென்யா நாட்டு இளைஞரை கைது செய்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கோகையின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கென்யா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.