av9crvd_0908chn_142_3

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமாா் 20,000 ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம்(எஸ்எஸ்டிஏ) பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தலின்போது, வாக்குறுதி அளித்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்து தற்போது நான்கரை ஆண்டுகளாகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தொடா்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-ஆம் தேதி 3 போ் கொண்ட குழுவை மட்டுமே தமிழக அரசு அமைத்தது. அதிலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தோ்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னையில் செப்டம்பா் 29, 30-ஆம் தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தின் பொதுச் செயலா் ஜெ.ராபா்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest