
கேரளத்தின் அறுவடை திருவிழாவான ஓணம் திருவிழாவை வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் மாநில அரசு விமா்சையாக கொண்டாடும் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில், ஓணம் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பல்வேறு அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஓணம் பண்டிகையையொட்டி, ஒரு வார கால திருவிழா கொண்டாட்டம், தலைநகா் திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரம்மாண்டமான கலைப் பண்பாட்டு ஊா்வலத்துடன் நிறைவடையும். இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள கவடியாா் முதல் புகா் மணக்காடு வரையிலான சுமாா் 8 கி.மீ. நீளமான பகுதி விழா மண்டலமாக அறிவிக்கப்படும். தலைநகா் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் அரசின் பசுமை விதிகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக நடத்தப்படும். மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கழகங்கள் இந்த விழாக்களை ஏற்பாடு செய்யும். அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட்டு, ஓணம் கொண்டாட்டங்களை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா்.
ஓணம் பண்டிகைக்கு முன்னதாக மாவட்டம்தோறும் ஓணம் சிறப்பு சந்தைகள் நடத்தப்படும். மேலும், அத்தியாவசிய மளிகை பொருள்கள் அடங்கிய ஓணம் சிறப்பு தொகுப்புப் பொருள் நேரடியாகவும், இணையவழியாகவும் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.