
புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அதன்பிறகு தனித்தனியே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையே மத்தியஸ்தமும் பலனளிக்கவில்லை. கருத்து வேறுபாடு சரியாகவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம், 142வது சட்டப்பிரிவின்படி, தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கில் விவாகரத்து வழங்கி முடித்து வைப்பதாகத் தெரிவித்துள்ளது.
மணமுறிவு ஏற்பட்ட தம்பதியை, சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால், தொடர்ந்து அது மனவேதனையைத்தான் அதிகரிக்கும், இதுபோன்ற வழக்குகளில், ஒரே வீட்டில் தம்பதி ஒன்றாக வாழ முடியாதபோது நீதிமன்றம் விவாகரத்து வழங்கிவிடலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.
இந்த நீதிமன்றமானது, தொடர்ந்து பார்த்து வருகிறது, அதாவது, ஒரு திருமண உறவு என்பது மரியாதை, ஒருவருக்கு ஒருவர் புரிதல், சுக-துக்கங்களை பகிர்தல் போன்றவையே அடிப்படை. ஆனால், எப்போது, இந்த அடிப்படை விஷயங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு மாறிவிடுகிறதோ, அப்போது, அவர்களை சட்டத்தின்படி ஒன்றாக வாழச் சொல்வதாக எந்தப் பலனும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமுதா – சுப்பிரமணியம் தம்பதியின் விவாகரத்து வழக்கில், அவர்கள் இருவரது நலன் மற்றும் மரியாதைக்கு முன்னுரிமை அளித்து, மணிமுறிவு ஏற்பட்டவர்களை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்துவது, மன வேதனையை அதிகரிக்கச் செய்யும், சமுதாய அழுத்தமும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமாகி, ஓராண்டுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2009 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவர் தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், அவர் சொன்னக் குற்றங்களை நிரூபிக்க முடியாததால், 2017ஆம் ஆண்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தில்லி உயர் நீதிமன்றத்திலும் 2019ல் விவாகரத்து மனு தள்ளுபடியாகிறது.
இந்த நிலையில்தான் விவாகரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது. தொடர்ந்து 16 ஆண்டு காலம் இருவரும் பிரிந்தே வாழ்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்து, நடைமுறையிலும், சட்டப்படியும் இருவருக்கும் விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்கிறது என்று தெரிவித்துள்ளது.
In a divorce case that has been ongoing for 16 years, the Supreme Court has opined that forcing a couple seeking divorce to live together would only cause emotional distress.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்… ஆதார், வெறும் அட்டைதானா?