
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மகன்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராஜா, மீனா ஆகியோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுமி கவிஷாவை, ராஜாவின் தாய் சாந்தி அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வழக்கமாக மாலையில் அங்கன்வாடியிலிருந்து சிறுமி கவிஷா தானாக வந்துவிடும் நிலையில், 30ம் தேதி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பாட்டி சாந்தி அங்கன்வாடி மையத்திற்குச் சென்று விசாரித்த போது காலையிலேயே சிறுமி வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தேவூர் போலீஸிடம் ராஜா புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அங்கன்வாடி மையத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், ராஜாவின் வீடு மற்றும் அங்கன்வாடி மையம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாயமான சிறுமி கவிஷாவை குடும்பத்தினரை விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அது தொடர்பாக பாட்டி சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.