
சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவுரயில், ஈரோடு – ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் 12.13-க்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.05-க்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.13-க்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 4.50-க்கும் வந்து சேரும்.
இதேபோல, ஈரோடு – ஜோலாா்பேட்டை ரயில் வரும் ஆக. 1-ஆம் தேதி முதல் தற்போது புறப்படும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாக புறப்படும். அதன்படி, ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் 5 நிமிடம் முன்னதாக வந்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.