
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று காலை தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.
இந்த செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
“ராஜிநாமாவுக்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். இதைப் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. மத்திய அரசு அல்லது அவருக்குத் தெரியும். அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் அரசிடம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.
திமுக மூத்த எம்பி டி. ஆர். பாலு, அழுத்தம் காரணமாக தன்கர் ராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கெளரவ் கோகோய் கூறியதாவது:
”மத்திய அரசுக்கு குடியரசு துணைத் தலைவருக்கும் இடையேயான உறவு முன்பு போல் இல்லை எனத் தெரிகிறது. ஏனென்றால், நேற்று தன்கர் நடத்திய கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட இல்லை.
குடியரசுத் துணைத் தலைவர் தனது உடல்நிலை காரணமாக ராஜிநாமா செய்யவுள்ளது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்ததா? இல்லையெனில், ஏன் இதுபோன்ற குழப்பம்? நாங்கள் இதனை அறிய விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்,
சமாஜவாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் கூறியதாவது:
“நேற்றைய கூட்டத்தில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை போன்று தெரியவில்லை. இந்த செய்தியை அறிந்ததும் நேற்றிரவு அதிர்ச்சி அடைந்தேன்.
அவர் தனது உடல்நிலையை மேற்கோள் காட்டி ராஜிநாமா செய்திருப்பதால் எதுவும் சொல்ல முடியாது. அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகௌம் இருக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.