
பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்குரிமை பேரணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பிகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணம் நேற்று தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி வந்தடைந்தது. தேவ் சூரிய மந்திரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தரிசனம் செய்த பின்னர், இரண்டாம் நாள் பேரணியைத் தொடங்கினர்.
இந்த நிலையில், சாலையின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் நின்று ராகுல் காந்திக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கேரள காங்கிரஸ், “ஜனநாயகத்தின் காவலர் முன்னேறுகிறார். பாஜக என்ற விஷத்தை சுத்தம் செய்யும் வரை அவர் ஓய மாட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
The keeper of democracy marches on! He won't stop until the system is cleaned of the poison called BJP.
LoP Rahul Gandhi
Bihar #VoteChori #VoterAdhikarYatra pic.twitter.com/BsTdhkVZ4C
— Congress Kerala (@INCKerala) August 18, 2025
நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த பேரணி, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.