
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம், வுலர் ஏரியின் வளமான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்ததைத் தொடர்ந்து, ஆசியாவின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான வடக்கு காஷ்மீரில் உள்ள வுலர் ஏரியில் தற்போதுதான் தாமரை மலர்ந்துள்ளது.
அதாவது, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, நன்னீர் ஏரியில் தாமரை மீண்டும் மலர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
200 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரவியிருக்கும் இந்த ஏரியில், இளஞ்சிவப்பு நிறத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள், சுற்றுச்சூழலுக்கு முக்கியமானது மட்டுமல்ல, அப்பகுதி மக்களின் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்துள்ளது.
பந்திப்போரா மாவட்டத்தின் சோபோர் நகரிலிருந்து, பாரமுல்லா மாவட்டம் வரை இந்த ஏரி விரிந்து பரந்து காணப்படுகிறது. இது அதிசயம் இன்றி வேறில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் பல முறை இந்த ஏரியில் தாமரையின் விதைகளைத் தூவி வந்தோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை. வெள்ளத்தால் ஏரியில் நிரம்பியிருந்த வண்டல் மண்தான் அதற்குக் காரணம்.
பிறகு, இந்த ஏரியில் வண்டல் மண் தூர்வாரப்பட்டு, தாமரை விதைகள் விதைக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாமரைச் செடிகள் வளரத் தொடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு தாமரை மலர்கள் மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.