
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை(செப். 21) காணொலி வழியாக ஆற்றிய உரையில் கட்டாயம் பேசியிருக்க வேண்டுமென்று ஜம்மு – காஷ்மீரின் முக்கிய தலைவரான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(செப். 21) மாலை 5 மணியளவில் மக்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அதில், அவர் ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரம் வருமான வரியில் தளர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் உரையில் பெரிதாக எதையோ சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவர் அப்படியொன்றும் புதிதாக சொல்லவில்லை. இதனால் மக்களுக்கு ஏமற்றமே மிஞ்சியது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் உரை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளர்களுடன் பேசுகையில், “ஜிஎஸ்டி குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், அதேவேளையில், எங்களுக்கான மாநில அந்தஸ்து குறித்து நீங்கள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்றார்.
ஜம்மு – காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து வழங்கப்படுவது கோரி இவ்விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் இரண்டாம் வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது குறித்து ஃபரூக் அப்துல்லா குறிப்பிடும்போது, “மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்று ஜம்மு – காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்றார்.