
ஜிஎஸ்டி வரி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமே வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்கானது என்று சொல்லும் அளவுக்கு இன்று முதல் பெரும்பாலான பொருள்களின் விலைகள் குறைந்துள்ளன.
இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தில் அத்தியாவசிய பொருள்களுக்கு 5 சதவிகிதம், அடிப்படையான சரக்கு மற்றும் சேவைகளுக்கு 18 சதவிகிதம், சொகுசு மற்றும் ஆடம்பர பொருள்களுக்கு 40 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, மூன்று எளிமையான வரி அமைப்புக்குள் நாட்டின் வரி முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.
இந்த மாற்றத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருப்பது மின்னணுத் துறை. முன்பு 28 சதவிகித வரி விதிக்கப்பட்ட குளிர்சாதன கருவி, குளிர்பதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் மற்றும் பெரிய திரைகளைக்கொண்ட தொலைக்காட்சிகள் போன்ற சாதனங்கள் இதுவரை 28 சதவிகிதத்திலிருந்து இப்போது 18 சதவிகிதமாகக் குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.
இதனால், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க திட்டமிட்டிருந்த மக்களுக்கு சில ஆயிரங்கள் வரை மிச்சமாகும் என கூறப்படுகிறது.
ஆனால், அனைத்து மின்னணு சாதனங்களும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் 18% நிலையான வரி வரம்பிலேயே உள்ளன, இதனால் அவற்றின் விலைகள் பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளன.
இந்த சாதனங்களின் விலை குறையுமா என்று எதிர்பார்ப்பவர்கள், பண்டிகைக் கால சலுகைகளுக்காகத்தான் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை.
அடுத்து, 12 சதவிகிதமாக இருந்த விடுதிக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாகக் குறைந்திருப்பதால், ரூ.7500 வரை கட்டணம் கொண்ட தங்கும் விடுதி அறைகள் வாடகை ரூ.525 வரை குறைகிறது.
விலைக் குறைப்புடன், ஆடம்பரப் பொருள்களுக்கான வரி 40 சதவிகிதம் என உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருள்கள் 28 சதவிகித வரியுடன் சேர்த்து செஸ் வரி விதிக்கப்படும்.