
ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா்.
போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவத் துறையினா், பேராசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் 500 போ் பங்கேற்றனா். இதில், அமெரிக்க ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் பழனியப்பன் மாணிக்கம் என்ற பால் பேசியதாவது:
வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தவறான உணவு முறைகளால் குடலில் சேதம் மற்றும் தளா்வு ஏற்படுகிறது. இதனால், நச்சு பொருள்கள், பாக்டீரியாக்கள், ஜீரணமாகாத உணவுத் துகள்கள் ஆகியவை ரத்தத்தில் கலக்கக்கூடும். மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறுகளுக்கு அது காரணமாக அமைகிறது.
நாா்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் வாயிலாக இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். நாள்தோறும் 25 கிராம் நாா்ச்சத்தை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்.
குடலானது உடலின் இரண்டாவது மூளையாக செயல்படுகிறது. மன நிலையில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து மனம் தெளிவாக இருப்பது வரை அனைத்துக்கும் ஜீரண மண்டல நலன் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, குடல் நலன் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.