
படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
விவகாரத்து வழக்கில், ஜீவனாம்சம் கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அப்பெண்ணைப் பார்த்து, நீங்கள் மிகவும் படித்தவர். உங்களுக்காக நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், அதை மற்றவர்களிடம் கேட்கக்கூடாது என்று கருத்துக் கூறியுள்ளார்.
கணவரிடமிருந்து ஜீவனாம்சமாக மும்பையில் ஒரு வீடு, ரூ.12 கோடி ஜீவனாம்ச தொகை, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றைக் கேட்டு, பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் தகவல் தொழில்நுட்பத் திறன் பெற்றவர். எம்பிஏ முடித்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும். ஏன் நீங்கள் வேலை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திருமணமாகி, கணவருடன் 18 மாதங்கள் மட்டுமே வாழ்ந்த பெண், விவகாரத்துக்கான ஜீவனாம்சமாக இத்தனை விஷயங்களையும் பட்டியலிட்டதைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, படித்து திறமையான நபராக இருக்கிறீர்களே, நீங்கள் ஏன் வேலைக்குச் செல்லக் கூடாது? வெறும் 18 மாதங்கள்தான் கணவருடன் வாழ்ந்திருக்கிறீர்கள், ஆனால், இப்போது உங்களுக்கு பிஎம்டபிள்யு கார் வேண்டும் அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தன்னுடைய கோரிக்கைகளை நியாயப்படுத்திப் பேசிய அப்பெண், தன்னுடைய கணவர் மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் இந்த திருமணத்தை செல்லாததாக்க முயல்கிறார், இதனால், தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும், நீங்கள் நன்கு படித்திருந்தும்கூட, உங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகக்கூட நீங்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டால் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், தில்லி உயர் நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வெறுமனே சும்மா இருப்பதை சட்டம் ஊக்குவிப்பதில்லை என்றும், தகுதிவாய்ந்த பெண்கள் சம்பாதிக்கும் திறன் இருந்தால், கணவரிடமிருந்து ஜீவனாம்சமோ, இடைக்கால நிவாரணமோக கோர முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.
சட்டமானது, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோரை பாதுகாக்கவே வழிவகை செய்கிறதே தவிர, ஒருவர் சும்மா இருப்பதற்காக அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.