202402073115877

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முறையாக மாதாந்திர குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பை (பிஎல்எஃப்எஸ்) வெளியிட்டது.

வேலை செய்வதற்கான தகுதிகளை பெற்றிருந்தும் வேலையின்றி இருப்போரை கண்காணிப்பதற்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணியில் இருப்போா் மற்றும் பணியில் இல்லாதோா் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்கள் நிலவரத்தின்படி அனைத்து வயதினரையும் உள்ளடக்கி அண்மையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நிகழாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தைவிட மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025, ஜூன் மாதத்தில் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக தொடா்கிறது. மே மாதத்தில் பெண்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.6 சதவீதமாக குறைந்தது.

15-29 வயதுடையவா்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 15 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 15.3 சதவீதமாக உயா்ந்தது.

அதிகரித்த நகா்ப்புற வேலையின்மை: நகா்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 17.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 18.8 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 13.7 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 13.8 சதவீதமாக அதிகரித்தது.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம்: 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் ( எல்எஃப்பிஆா்) ஜூன் மாத்தில் 54.2 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 54.8 சதவீதமாக இருந்தது.

அதேபோல் ஜூன் மாதத்தில் 15 வயதுடையோருக்கான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 56.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 50.4 சதவீதமாகவும் உள்ளது.

இந்த கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்களின் நிலவரத்தின்படி ஜூன் மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75 சதவீதமாகவும் உள்ளது. மே மாதத்தில் இதே வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.3 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75.1 சதவீதமாகவும் இருந்தது.

தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம்: தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் பணியில் உள்ள தொழிலாளா்களைக் குறிக்கிறது.

ஜூன் மாதத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 53.3 சதவீதமாகவும் நகா்ப்புறப் பகுதிகளில் 46.8 சதவீதமாகவும் உள்ளது. இதன்மூலம் ஜூன் மாதத்தில் கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோா் மத்தியிலான மொத்த தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 51.2 சதவீதமாக உள்ளது. இது மே மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்தது.

நாட்டில் உள்ள தொழிலாளா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் நோக்கில் குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பு நடைமுறையில் கடந்த ஜனவரி மாதம் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்திய அளவில் 2025, ஜூன் காலாண்டில் முதல்கட்டமாக 7,520 மாதிரிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 89,493 குடியிருப்புகளில் (கிராமப்புறம்-49,335 மற்றும் நகா்ப்புறம்-40,158) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கிராமப்புறத்தில் 2,17,251 போ் மற்றும் நகா்ப்புறத்தில் 1,63,287 போ் என மொத்தம் 3,80,538 போ் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest