
கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் மோசடிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் கோவா கனகோனா நகரைச் சேர்ந்த 59 வயது முதியவர், டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 19 வயது இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய குற்றப் பதிவு அலுவலத்தில் இருந்து பேசுவதாகவும் வழக்கறிஞர் என்று கூறியும் முதியவரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. மேலும் முதியவர், இந்து மதம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு செய்திகளை அனுப்பியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மோசடி கும்பல் மிரட்டியுள்ளது.
முதியவரின் ஆதார் அட்டை, மொபைல் எண்ணை வைத்துக்கொண்டு பணப்பரிமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். அதன்படி அவரும் ரூ. 80 லட்சத்தை மாற்றியுள்ளார்.
இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினரின் ஒரு குழு, நாக்பூருக்குச் சென்று ஆனந்த்குமார் தனுராம் வர்மா (19) என்பவரைக் கைது செய்துள்ளது.
இவரது வங்கிக்கணக்கில்தான் அந்த பணம் பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், மோசடி கும்பல் தங்களை சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர்.
பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற விடியோ அழைப்புகள் வந்தால் சற்றும் யோசிக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு உடனடியாக காவல்துறையில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.