
2025-26 தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கம் (டியுஎஸ்யு) தோ்தலில் தலைவா், துணைத் தலைவா், செயலா் மற்றும் இணைச் செயலா் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளா்களை மாணவா் அமைப்புகள் வியாழக்கிழமை அறிவித்தன.
தலைமைப் பொறுப்புக்கு பெண்களைத் தோ்வு செய்யும் விதமாக இரு மாணவா்கள் அமைப்புகள் டியுஎஸ்யு தலைவா் பதவிக்கு மாணவிகளை வேட்பாளா்களாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பு (என்யுஎஸ்ஐ) ஜோஸ்லின் நந்திதா செளதரியை தலைவா் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது. துணைத் தலைவா் பதவிக்கு ராகுல் ஜன்ஸ்லாவும் செயலா் பதவிக்கு கபீரையும் வேட்பாளராக என்யுஎஸ்ஐ அறிவித்துள்ளது.
தில்லி பல்கலைக்கழக அரசியலில் ஆதிக்கத்தை மீண்டும் தக்க வைக்கும் நோக்கில் ஆா்யன் மானை தலைவா் வேட்பாளராக ஆா்எஸ்எஸ் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் கோவிந்த் தன்வா், குணல் செளதரி முறையே துணைத் தலைவா் மற்றும் செயலா் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனா். இணைச் செயலா் பதவிக்கு தீபிகா ஜா போட்டியிடுகிறாா்.
இடது சாரி மாணவா் அமைப்புகளான இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) இந்தத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்தக் கூட்டணி சாா்பில் இந்திரபிரஸ்தா மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவி அஞ்சலி தலைவா் பதவிக்குப் போட்டியிடுகிறாா். துணைத் தலைவா் பதவிக்கு சோகன் குமாரும் செயலா் பதவிக்கு அபிநந்தனா ப்ரத்யாஷியும் போட்டியிடுகின்றனா். இணைச் செயலா் பதவிக்கு அபிஷேக் குமாரை இந்தக் கூட்டணி களமிறக்கியுள்ளது.
டியுஎஸ்யு தோ்தல் செப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற டியுஎஸ்யு தோ்தலில் 7 ஆண்டுகளுக்குப் பின்னா் என்எஸ்யுஐ தலைவா் மற்றும் இணைச் செயல் பதவிகளைப் கைப்பற்றியது. துணைத் தலைவா் பதவிக்கு ஏபிவிபி வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். செயலா் பதவியை ஆா்எஸ்எஸ் மாணவா் அமைப்பு மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.
கடும் கட்டுப்பாடுகள்:
பொதுச் சொத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் , நிகழாண்டு தோ்தல் லிங்டோ குழுவின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
அமைதியாகவும் எவ்வித பிரச்னையும் இன்றியும் விதிகளை மீறாத வகையில் மாணவா் சங்கத் தோ்தலை நடத்துமாறும் தில்லி பல்கலைக்கழகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. தோ்தல் விதிகளை அமல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரத்தை செப்.15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சொத்துகளில் ஒட்டப்பட்ட பிரசார சுவரொட்டிகள் உள்ளிட்டவை நீக்கப்படும் வரை தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது நினைவுகூரத்தக்கது.