
சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம்.
இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர்.
நேற்று இந்தியா–அமெரிக்கா அதிகாரிகள் இடையே இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
“இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளர் திரு. பிரெண்டன் லின்ச் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, செப்டம்பர் 16, 2025 அன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.
அவர்கள், இந்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலர் தலைமையிலான அதிகாரிகளுடன், இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தனர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்த விவாதங்கள் நேர்மறையாகவும் எதிர்கால நோக்கத்துடனும் நடைபெற்றன.
இருதரப்பிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
