
தெரு நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறமும், நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் நாய் பிரியர்கள் ஒருபுறமும் வாதிட்ட இந்த நிகழ்ச்சி பொது வெளியில் பெரிய பேசு பொருளானது.
நடிகர் படவா கோபி, நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து படவா கோபி, அம்மு இருவருமே வீடியோ வெளியிட்டு, ‘நாங்கள் பேசியதை முழுவதுமாக சேனல் வெளியிடவில்லை; எனவே எங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது’ எனச் சொல்லியிருந்தார்கள்.

இருந்தாலும் இப்போது வரை இவர்கள் மீதான பொது மக்களின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.
இவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் சில எதிர்வினைகளையும் இவர்கள் சந்தித்து வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் நடிகை அம்மு, சேனல் தரப்பிடமே நேரடியாகப் பேசிக் குமுறி விட்டாராம்.
‘உங்களால் என்னுடைய இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆகியிடுச்சு. கடை திறப்பு மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முன்னாடி போய் வந்திட்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஈவென்ட் ஆர்கனைசர்கள் என்னைக் கூப்பிடவே தயங்குறாங்க.
என்னுடைய வருமானமே போச்சு. பேலன்ஸ்டா பேசினாலும் உங்களுக்குத் தேவையானதை மட்டும் ஒளிபரப்பி எங்களை டேமேஜ் செய்யறீங்க’ என மனக் குமுறலைக் கொட்டியவர், அதைச் சரி செய்ய அடுத்து வைத்த கோரிக்கைதான் ஹைலைட்.

‘என்னுடைய இந்த நிலைமை சரியாக இந்த வருஷம் அதாவது பிக்பாஸ் சீசன் 9ல் என்னையும் ஒரு போட்டியாளரா அனுப்புங்க’ என்பதே அந்தக் கோரிக்கை என்கின்றனர் அம்முவுடனும் சேனலுடனும் தொடர்பில் இருக்கும் சிலர்.
ஆனால், சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.
‘எதையும் உறுதியாச் சொல்ல முடியாது. சர்ச்சையான ஆட்களை அனுப்பினால் நிகழ்ச்சிக்கு நல்லதுதானே என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள், சேனலை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…