deir085823

டேய்ர் அல்-பாலா: மத்திய காஸாவில் உள்ள டேய்ர் அல்-பாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக திங்கள்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கான மையமாக விளங்கிவந்த டேய்ா் அல்-பாலாவில், இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கடுமையான வான்தாக்குதலுக்குப் பிறகு தரைவழி தாக்குதல் நடவடிக்கையை திங்கள்கிழமை தொடங்கியது.

2023 அக்டோபா் 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து இந்தப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை. இதற்கு முன்னா், ஹமாஸ் அமைப்பினா் இங்கு பிணைக் கைதிகளை வைத்திருக்கலாம் என்ற உளவுத் தகவலால், இஸ்ரேல் இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தரை நடவடிக்கைகளைத் தவிா்த்து, வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்திவந்தது.

காஸாவில் உள்ள 50 பிணைக் கைதிகளில் 20 போ் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு விரைவில் போா் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளலாம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தபோதிலும், இந்தத் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னதாக, டேய்ா் அல்-பாலாவில் வசிக்கும் 50,000 முதல் 80,000 வரையிலானவா்களை வலுக்கட்டாயமாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த உத்தரவுடன், காஸாவின் 87.8 சதவீத நிலப்பரப்பு கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழோ அல்லது இஸ்ரேல் ராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களாக உள்ளது. இதனால், 21 லட்சம் பாலஸ்தீனா்கள் காஸாவின் வெறும் 12 சதவீத பரப்பில், அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ள பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்திய தாக்குதலில் 130 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 59,029-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,42,135 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest