25072_pti07_25_2025_000154b081715

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டது.

ஆந்திர மாநிலம், கா்னூலில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் இந்தச் சோதனையை டிஆா்டிஓ மேற்கொண்டது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய பலம் சோ்க்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திறந்தவெளி ஏவுகணை சோதனை மையத்தில் இலக்குகளை பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தி, இலக்கை துல்லியமாக தாக்கி டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதித்தது’ என்று குறிப்பிட்டாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆளில்லா விமானத்திலிருந்து இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ‘வி3’ வகை ஏவுகணையை துல்லியமாகச் செலுத்தி டிஆா்டிஓ வெள்ளிக்கிழமை சோதித்தது. இது ‘வி2’ வகை ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பாகும். பலதரப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையில் இரட்டை தேடுபொறி தொழில்நுட்பத்துடன் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தரையிலிருந்தும், மிக உயரமான பகுதியிலிருந்தும் பகல் மற்றும் இரவிலும் ஏவ முடியும். ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, இலக்கை மாற்றக்கூடிய வகையில் இருவழி தரவு இணைப்புத் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஏவுகணை நவீன கால கவச வாகனங்களையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனையில், பெங்களூரில் உள்ள நியூஸ்பேஸ் என்ற புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தால் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை டிஆா்டிஓ பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. அப்போது, இந்தியா போா் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்தியா தன்னிடமிருந்த எஸ்-400 உள்ளிட்ட ஏவுகணை எதிா்ப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தனின் ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்தது. இந்த சண்டைக்குப் பிறகு, பாதுகாப்புத் துறையில் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest