
நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12.56 கோடியாகும். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் தனது தந்தையின் நண்பரின் உதவியோடு அடிக்கடி ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 2023-25ம் ஆண்டுகளில் துபாயில் இருந்து ரன்யா ராவ் 34 முறை தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்திருந்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதில் ரூ.2.06 கோடி மதிப்பு தங்கம் மற்றும், ரூ.2.67 கோடி மதிப்பு ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட், செசன்ஸ் கோர்ட் மற்றும் கர்நாட்கா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதையடுத்து கைது செய்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி ரன்யா ராவ், அவருடன் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை தருண் ராஜு மற்றும் ஜூவல்லர் சாஹில் ஜெயின் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் அன்னிய செலவாணி மற்றும் கடத்தல் தடுப்பு சட்டமான காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ரன்யா ராவ் மீது ஏப்ரல் 22ம் தேதியே காபிபோசா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டுக்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய முடியாது. அவர் ஒரு வருடம் சிறையில் இருந்த பிறகுதான் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளது.
ரன்யாவுடன் கைது செய்யப்பட்ட தருன் ராஜு தங்கம் கடத்தலுக்கு ரன்யாராவிற்கு உதவியாக இருந்தார். மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் சாஹில் ஜெயின் நடிகை ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை விற்பனை செய்யவும், ஹவாலா முறையில் பணத்தை மாற்றவும் உதவி செய்துள்ளார். காபிபோசா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை நீட்டிப்பது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பின்னர் கூடி முடிவு செய்யும். காபிபோசா சட்டத்தின் கீழ் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்து அவரது தாயார் ரோஹினி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.