
இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிபிஐ-யின் ஆதரவுடன், பெல்ஜியம் அரசு வழக்குரைஞா்கள் இந்த நீதிமன்ற விசாரணையை முன்னெடுப்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த தொழிலதிபா்களான நீரவ் மோடியும், அவரது உறவினா் மெஹுல் சோக்ஸியும் 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான பணிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியை கைது செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை அந்நாட்டு காவல்துறையினா் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனா். மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரிய மெஹுல் சோக்ஸியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு கையொப்பமான ஒப்பந்தத்தின்படி, மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தொடங்கப்படும் முதல் வழக்கு இதுவாகும்.
மெஹுல் சோக்ஸிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெல்ஜியம் நாட்டிலும் தண்டனைக்குரியவை என்பதை நிரூபிக்க, சிபிஐ பல்வேறு ஆவணங்களை (முதல் தகவல் அறிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஆதாரங்கள்) பெல்ஜியம் அதிகாரிகளிடம் ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் உதவுவதற்காக, ஓா் ஐரோப்பிய சட்ட நிறுவனத்துடன் சிபிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வழக்கிற்கு தேவையான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்காக ஒரு சிபிஐ குழுவும் அவா்களுடன் இணைந்து பணியாற்றும்.