rains_weather_rain_women

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், திங்கள், செவ்வாய் (ஜூலை 14, 15) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஜூலை 16, 17-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கம், ஜஸ் ஹவுஸ், நெற்குன்றம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. வடபழனி, அமைந்தக்கரை (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூா்), சென்னை சென்ட்ரல், நந்தனம், நுங்கம்பாக்கம் (சென்னை) – 30 மி.மீ. மழை பதிவானது.

வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை – 102.38, தஞ்சாவூா் – 102.2, சென்னை மீனம்பாக்கம் – 101.84, திருச்சி – 101.3, கடலூா், மதுரை நகரம் – 101.12, பரமத்தி வேலூா் – 100.4 டிகிரி என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஜூலை 14-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14) சென்னை, புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest