TNIEimport202329originalEnrolment1

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ் பிரதானமான அடையாளமாக இருக்கும் என்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்ததுடன், அதற்கான அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார்.

இந்த கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 75 சதவிகிதத்தினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அடுத்தாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 901 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது; முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும்.

படித்து மனப்பாடம் செய்வது போன்று அல்லாமல், சிந்தித்து கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்கு புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை. இந்தக் கல்விக் கொள்கை மூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு, 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் பல்கலை. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.

அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்து, 2024 ஜூலை முதல் தேதியில் தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest